வரலாற்று வாசனை
                                                                                                                       ப. சதீஷ்
                                                  உதவி பேராசிரியர் (வரலாறு)

     நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கடந்த காலம் என்று ஒன்று நிச்சயம் உண்டு. வரலாற்றில் பல கடந்த கால நிகழ்வுகள் நிச்சயமாக ஆச்சரியபடுத்தகூடியவை. அப்படிபட்ட ஒரு சில நிகழ்வுகளை இங்கே பதிவு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.  பள்ளியில் வரலாறு எனக்கு பிடித்த பாடம் அல்ல, ஆனால் கல்லூரியில் அது எனக்கு கட்டாயத்தின் பேரில் பிடித்த பாடமாகியது.  மிகவும் நுட்பமாக அலசினால் வரலாறு மிகவும் விஸ்தாரமானது, ஏனெனில் பிரெஞ்சு பேரரசன் நெப்போலியனை பற்றி மட்டும் எழுதப்பட்ட புத்தகங்கள் பல்லாயிரம். காலத்தில், பூமியின் சதவீதத்தை நூறு என்று வைத்துக்கொண்டால், பாலூட்டிகளின் பங்கு நான்கு சதவீதம், அதில் மனித உயிரினம் மற்றும் அதன் வளர்ச்சியின் பங்கு ௦.1 சதவீதம் மட்டுமே (என்ன ஆட்டம் போடுகிறோம்).  நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மீன்கள் மட்டுமே உருப்படியான உயிரினங்கள். கரப்பான் பூச்சி கூட நம்மை விட சீனியர்.
     ஒவ்வொரு நிகழ்வுகளும் காரணங்கள் நிச்சயம் உண்டு.  காரணங்களை கண்டுபிடிக்காதவரை அந்த நிகழ்வுகள் அற்புதங்களாக தோன்றும். இப்படிப்பட்ட நிகழ்வுகள் எராளம்.  தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான் நாகரீகம் வந்தது என்றால் அது மிகையாகாது..  அப்படி நடோடிதன தவறுகளில் இருந்து கலாசார நாகரீகத்திற்கு அடிப்படை அமைத்தவர்கள் பாபிலோனியர்கள்.  பாபிலோனியா பெற்றெடுத்த நாகரீகம் மேசொபோடோமியா (இன்றைய ஈராக்).  சக்கரம், கட்டட கலையில் வளைவு  இவர்களின் கண்டுபிடிப்பே !.
     உலகில் சட்டம் தந்த முதல் மாபெரும் மன்னன் ஹமுராபி இங்குதான் தோன்றினான்.  “ஒரு வீடு கொள்ளையடிக்கப்பட்டு, காவலர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் திருடர்களை கைது செய்யாவிட்டால், அவர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இழப்பீடு செய்யவேண்டும்”( என்ன ஒரு துணிச்சலான சட்டம், இப்பொழுது இருந்தால் நன்றாக இருக்குமே!)
     பல நாகரீகங்களின் இடிபாடுகள் மக்களின் கட்டுமான பணிகளுக்கு கச்சா பொருட்களாக உபயோகபடுத்தப்பட்டது.  அவ்வாறு ஒரு நாகரீகம் இந்தியாவில் பானர்ஜி மற்றும் ஜான் மார்ஷல் கண்களில் பட்டவுடன், அந்த கலாச்சாரத்தின் கதவுகள் முட்டி மோதப்பட்டு திறக்கப்பட்டன.  ------  ஆம் அதுதான் சிந்து சமவெளி நாகரீகம்.   துறைமுகங்களை கட்டிய இந்த மக்கள், பருத்தியை விளைவித்தவர்கள்.  கோழிகளை முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்த்தவர்கள். வரலாறு மற்றும் வரலாற்று படிப்பினை நுட்பம் தெரியாதவர்கள் இன்றும் கேட்கின்ற ஒரு கேள்வி என்னவென்றால் வரலாற்றில் என்ன இருக்கிறது. அசோகர் மரம் நட்டார், குளம் வெட்டினார்.  இந்த கேள்வியை அதிகமாக சந்தித்தவர்களில் நானும் ஒருவன்.  ஒரு மாமன்னன்  ஏன் மரம் நடவேண்டும், குளம் வெட்டவேண்டும் என்று யோசித்து பார்த்தால், அது அரசு, மக்கள் , நிர்வாகம், சமுதாய நலத்திற்காக மன்னன் அவசியம் செய்யவேண்டிய கடமை என்று புரியும். அரசு என்பதே மன்னனுக்கும் மக்களுக்கும் உள்ள பரஸ்பர புரிந்துணர்வே.  அந்த புரிந்துணர்வை அழகாக செயல்படுத்துவது மக்கள் செலுத்தும் வரி மற்றும் அது வசூலிக்கப்படும் முறை. ஏனெனில் இதில் சிறு குளறுபடி ஏற்பட்டாலும் உள்நாட்டு குழப்பங்களும், கலகங்களும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வரி என வாக்கியங்களில் வாசிக்கபட்டாலும், இது அரசின் பொருளாதாரமே. இது முறையாக வசூலிக்கபட்டதால், இந்தியாவில் புரட்சிகள் தவிர்க்கப்பட்டது எனலாம்.
     நந்தர்களால் அவமானபடுத்தப்பட்ட சாணக்கியர், பின்னர் விலை கொடுத்து வாங்கிய சிறுவன் பின்னாளில் மௌரிய வம்சத்திற்கு அடிகோலியவன். ஆம் அவன்தான் சந்திரகுப்த மௌரியன்.  கிரேக்க படைகளை புறமுதுகிட்டு ஓடவைத்தவன்.  அதோடுமட்டுமில்லாமல், இந்தியாவில் பல சிறிய அரசுகளை இணைத்து மிக பெரிய சாம்ராஜ்யத்தை தன் வென்கொற்றகொடையின் கீழ் கொண்டுவந்தவன். இவனின் பேரன்தான் மாமன்னன்  அசோக சக்கரவர்த்தி.  அசோக மன்னன் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது கலிங்க போர். ஓர் ஆச்சர்யம் என்னவென்றால், அரியணையில் அமர்ந்து பதிமூன்று ஆண்டுகள் கழித்தே இவனது படை கலிங்க நாட்டை கபளீகரம் செய்துள்ளது. இவன் கலிங்கத்தின் மேல் போர் புரியும்போது, இவனை எதிர்த்து போர் புரிந்த கலிங்க மன்னன் யார் என்று இன்றுவரை வரலாற்று ஆய்வாளர்களுக்கு புதிராகவே உள்ளது.  இவன் செதுக்கிய பதிமூன்றாவது பாறை கல்வெட்டு ஆணை கலிங்க போரை பற்றி விரிவாக விளக்குகிறது. போருக்கு பிறகு இவன் பெளத்த மதத்தை தழுவினான் என்பதற்கும் நிறைய ஆதாரங்கள் உண்டு. ஒரு மாமன்னனால் மாபெரும் சாம்ராஜ்யம் கட்டப்பட்டு விரிவுபடுதப்படுகிறது என்றால், அதற்க்கு பின்னால் பல உயிர்கள் சிதைக்கப்பட்டு, அதன் உணர்வுகள் புதைக்கப்பட்டுள்ளன என்று அர்த்தம்.  இன்று பௌத்தம் ஸ்ரீ லங்காவில் முக்கியத்துவம் பெற்று திகழ்கிறது என்றால் இவன்தான் காரணம். தான் பெற்ற பிள்ளைகளை அங்கு அனுப்பி பௌத்தத்தை பரப்பியவன் இவனே. தன் கல்வெட்டுகளில் இவன் பெயரை குறிப்பிடமால் தன்னை “ கடவுளின் அன்புக்குரியவன்”(தேவனாமே பியடாசி) என்றே குறிப்பிட்டுள்ளான். பின்னர் ஒரு சில கல்வெட்டுகளில் அவன் பெயர் தென்பட பல வரலாற்று செய்திகள் ஆதாரத்துடன் காப்பாற்றபட்டது.  பெளத்த மத இலக்கிய ஆதாரங்கள் இவனை கொடுங்கோல் மன்னனாகவே சித்தரிக்கிறது..  எந்த மன்னனாவது தன் தோல்வியை கல்வெட்டில்  செதுக்கியிருக்கின்றானா? .ஒரு மன்னனின் தோல்வியை,  வெற்றி பெற்ற இன்னொரு மன்னனின் வெற்றிக்கான கல்வெட்டில் நாம் அறிந்துகொள்கிறோம்.
     வரலாற்றில் அவுரங்கசீப் என்றழைக்கப்பட்ட முகலாய மன்னனை, ஒரு கொடுங்கோல் மன்னனாக நாம் பார்க்கிறோம், ஆனால், சாகும்வரை அவனோ குரான் எழுதியும், குல்லா தைத்து விற்ற பணத்தில் தன் வாழ்கையை நடத்தினான். உண்மையான தாஜ்மஹாலை போலவே மாதிரி தாஜ்மஹாலை தன் மனைவிக்காக ஔரங்காபாத்தில் கட்டியவனை மறந்துவிடுகிறோம்.
     முஸ்லிம் மன்னர்கள் கோயில்களை இடித்தனர் என்றும், ஹிந்து மன்னர்கள் மசூதிகளை இடித்தனர் என்றெல்லாம் இப்பொழுது வரலாறு எழுதப்படுகிறது.  மசூதிகளை இடித்த முஸ்லிம் மன்னர்களும் உண்டு, கோயில்களை இடித்த ஹிந்து மன்னர்களும் உண்டு. அவுரங்கசீப்பால் கோல்கொண்டாவில் மசூதிகள் இடிக்கப்பட்டது. மராட்டியர், திப்பு சுல்தான்மேல் உள்ள கோபத்தில் ஸ்ரீ ரங்கபட்டினத்தில் உள்ள ஹிந்து கோயிலை உடைத்துள்ளனர்.  ஒரிசாவை ஆண்ட ஹிந்து மன்னன் கபிலேஸ்வர கஜபதியின் படைகள் திருவாரூர் கோயிலை சிதைத்தனர்.   வீரசிவாஜியால் புனரமைக்கப்பட்ட மசூதிகளும் உண்டு. காஷ்மீரில் உள்ள ஹிந்து கோயில்களை உடைக்க தனி அதிகாரியை நியமித்திருந்த ஹிந்து மன்னனை பற்றிய குறிப்புகளும் கல்ஹனர்  எழுதிய ராஜதரங்கினியில் உண்டு.. சோமனத்பூரை கொள்ளையிட்ட கஜினி, தன் தலைநகருக்கு அருகில் இருந்த பாமியான் புத்தர் சிலைகளை உடைக்காமல் விட்டது ஏன்?   இதற்கெல்லாம் பின்னால் இருப்பது மத வெறியா ? அல்லது மனநிலையா?. நிச்சயமாக  மனநிலைதான் முதல் நிலை, மத வெறி இரண்டாம் பட்சம்தான்.  மும்தாஜையும், ஷாஜஹானையும் மனதில் கொள்ளும் நாம், ஜகாங்கீரையும் நூர்ஜஹானையும் இரண்டாம் பட்சமாகதான் ஏற்றுகொள்கிறோம். நூர்ஜஹானிடம் இருந்த அறிவு மும்தாஜிடம் இல்லை. ஜகாங்கீர் ஒவியகலையிலும், தோட்டகலையிலும் சாதித்தவன். அனால் நம்மிடம் முதலில் நிற்பது தாஜ்மஹால் மட்டுமே?. மும்தாஜின் கணவனை கொன்றவன் ஷாஜஹான் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.
     குப்தர்தர்கள் காலம் பொற்காலம் என்று வரலாற்றில் சொல்லப்படுகிறது. இதற்கு உண்மையான காரணம், இலக்கியங்கள் புத்துயிர் பெற்று, புனரமைக்கப்பட்டன. ஒரு பேரரசை பொற்காலம் என்று சொல்லவேண்டுமானால் அணைத்து துறைகளும் சிறந்து விளங்கவேண்டும். ஒரு துறையில் பெற்ற வெற்றியை வைத்து, பொற்காலம் என்று சொன்னால் அது தவறு.  வரலாறு திரும்புகிறது என்று சிலர் சொல்வதை நான் கேட்டு இருக்கிறேன். அது தவறு, ஏனெனில்  வரலாறு  என்பது ஒரு பிரளயம், அது தொடர்ந்து கொண்டே இருக்கும் ( cataclysmic continuation).  வரலாற்றில் மனிதன் ஒரு உயிரினமே தவிர, உருவக்கியன் அல்ல. அதே நேரத்தில் மனிதன் அல்லாமல், வரலாறும் அல்ல. வரலாற்று நிகழ்வுகள்  வேண்டுமானால் சில நேரங்களில் திரும்பும், அந்த நிகழ்வுகளில் கூட நேரமும், இடமும் மற்றும் மனிதனும் மாறிவிடுவான். இப்படி பல நிகழ்வுகளை பதிவு செய்துகொண்டே போகலாம். வரலாறு மனித குல வாழ்வியல் சம்மந்தபட்டது.  ஓரறிவில் இருந்து ஆறறிவு வரை உள்ள எந்த உயிரினமும் தன் இனத்திற்கு தீங்கு என்றால் ஒன்றினையும், அனால் ஆறறிவு உள்ள உயிரனம் மட்டுமே தன் இனத்தை தாக்குவதில் தன்னிலை பெற்றது. மனித நாகரீகம் அழிக்கப்படுவது மனித நாகரீகத்தாலே!.  

 எழுதுவதற்கு உதவிய நூல்கள்:
1.  கி. மு.  கி. பி.                      ------------------    மதன்
2.  வரலாறு என்றால் என்ன ------------------         அருணாசலம்
3.  வந்தார்கள் வென்றார்கள்  ---------------    மதன்
                       

Comments

Popular posts from this blog